சூடானில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் தமிழர்கள்

சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் சூடானிலிருந்து வெளியேற முடியாமல் 100 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூடானில் நிலவிய வன்முறை காரணமாக தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் விமான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சூடானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும், இந்தியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் சூடானில் சிக்கி தவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

மத்திய அரசின் ஆபரேசன் காவேரி
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு ஆபரேசன் காவேரி என்ற பெயரில் தொடங்கியுள்ளது.

மேலும் மீட்கும் பணி தொடங்கப்பட்டு சூடானுக்கு கப்பலையும், சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இரண்டு விமானங்களையும் அனுப்பியுள்ளது.

சூடானில் 72 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூடானில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..அங்குள்ள தமிழர்கள், வாட்ஸ் அப் குருப் ஒன்றை ஆரம்பித்து தங்களது விபரங்களை பகிர்ந்துள்ளனர்.

மின்சாரம் மற்றும் இணைய தள வசதி முடங்கியுள்ளதால் தகவல் பரிமாற்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor