நெடுந்தீவு கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்தி கிணற்றில் இருந்து மீட்பு!

யாழ் நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் கொலைகாரன் அணிந்திருந்த சாரமும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

நெடுத்தீவு ஐவர் கொலைச் சந்தேகநபரான் ரகுவை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று அனுமதியளித்தது.

கிணற்றில் இருந்து கத்தியும் சாரமும் மீட்பு
அதனடிப்படையில் ரகு இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

சம்பவத்தில் 100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார், கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற ரகுவை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.

சந்தேக நபரான ரகு , ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor