தமிழகத்தில் கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

தமிழகத்தின் புதுக்கோட்டை கடற்கரையில் இலங்கையின் கண்ணாடி இழைப்படகு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (04.04.2023) புதுக்கோட்டை – மணமேல்குடி அருகே உள்ள கடற்கரை கோடியக்காடு கிராமத்திலேயே குறித்த இழைப்படகு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாகக் கருதப்படும் பதிவு எண்ணைக் கொண்ட படகை, நேற்றைய தினம் காலை உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவதானித்துள்ளனர்.

விசாரணை
இது குறித்து உடனடியாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவர்கள் படகை ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

ஏறக்குறைய 18 அடி நீளமுள்ள இந்த படகு தொடர்பில், அருகிலுள்ள கண்காணிப்பு கருவிகளில் இருந்து காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட படகு வெளிநாட்டிற்குச் சொந்தமானது என்பதால் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor