180.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டில் இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து திருகோணமலை சம்பூரில் 135 MW சூரிய மின்சக்தி திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு நாட்டின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர, உற்பத்தி நிலையத்தை முன்னெடுப்பதற்கு நேற்று முன்தினம் (27.03.2023) அமைச்சரவையின் ஒப்புதலைக் கோரியிருந்தார்.
அத்துடன், முன்னதாக முன்மொழியப்பட்ட சம்பூர் நிலக்கரி மின்நிலையம் கட்டப்படவிருந்த அதே இடத்தில் 135 மெகாவாட் சூரிய சக்தி திட்டத்தை இரண்டு கட்டங்களாகக் கூட்டாகச் செயல்படுத்த கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இரண்டு தரப்புகளும் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க டொலர் மதிப்பீடு
அரச தகவல் திணைக்களத்தின் படி, 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டமும், சம்பூரில் இருந்து கப்பல்துறை வரையிலான 40 கிலோமீற்றர் நீளமான 220 KV மின் கடத்தும் பாதை, 23.6 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டிலும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.