பிரித்தானியாவின் கட்டுப்பாடில் இருக்கும் இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

டியாகோ கார்சியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளின் நிலைமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ருவாண்டாவுடன் பிரித்தானியா செய்துக்கொண்டுள்ள உடன்படிக்கையின் கீழ் இந்த அகதிகள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ளாத அகதிகள் தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்று அங்கிருந்து கனடா செல்ல முற்பட்ட போது தாம் பயணித்த படகில் இயந்திர பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே டியாகோ கார்சியாவில் தஞ்சம் கோரியதாகவும் இந்த அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை 9 பேர் வரை தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டதாகவும் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதுவரை தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தநிலையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் டியாகோ கார்சியா தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அவர்களை மீள இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: webeditor