உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் தீர்த்து வைப்பதற்கான வழிமுறையை அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அந்த வகையில் INR இல் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், செயல்முறையை சீராக செய்வதற்கும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
18 நாடுகளை சேர்ந்த வங்கிகளுக்கு அனுமதி
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் தீர்த்து வைப்பதற்காக வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்க 18 நாடுகளை சேர்ந்த வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பில் நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கார்ட் கருத்து தெரிவித்திருந்தார்.
அதாவது,பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற முக்கிய நாடுகளை சேர்ந்த வங்கிகள் உட்பட 18 நாடுகளை சேர்ந்த உள்நாட்டு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வங்கிகளுக்கு சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்க மத்திய வங்கி இதுவரை 60 அனுமதிகளை வழங்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.