யாழில் இருந்து கொழும்பிற்கு சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்ட விரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்புவாசிகள் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும், ஏனைய நான்கு மாடுகள் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளன. பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பலாலி பொலிஸார், சந்தேகத்துக்கு இடமான பட்டா ரக வாகனமொன்றினை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது அந்த சிறிய வாகனத்தினுள் இடவசதிகள் இன்றி ஐந்து மாடுகளை மிக நெருக்கமாக அடைத்து நிறுத்தி, மாடுகளை சித்திரவதைக்குட்படுத்தி, சட்ட விரோதமான முறையில் கொழும்புக்கு கடத்திச் செல்லப்படுவதை கண்டறிந்தனர்.

அதனையடுத்து வாகனத்தையும், அதில் இறந்துகிடந்த ஒரு மாடு அடங்கலான 5 மாடுகளையும் மீட்டு, வாகனத்தில் இருந்த கொழும்பு 14 பகுதியை சேர்ந்த இருவரையும், அச்சுவேலி தோப்புப் பகுதியை சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும் வலிகாமம் பகுதிகளில் கால்நடை திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு வரும் நிலையில் குறித்த மாடுகள் களவாடப்பட்ட மாடுகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor