உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A-380-800 இன்று காலை மூன்றாவது தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான EK-449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணிக்கும் போது எரிபொருளை பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
மிகப்பெரிய பயணிகள் விமானம் 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
மீண்டும் இன்று அதிகாலை வந்த விமானத்தில் 413 பயணிகள் மற்றும் 29 பணியாளர்கள் இருந்தனர், அவர்கள் யாரும் விமானத்தை விட்டு வெளியே வரவில்லை.
டுபாய் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த விமானம் டுபாய் விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் தரையிறங்குவது கடினம். இதனால் விமான நிலையம் அமைந்துள்ள வானில் பல சுற்றுகள் விமானம் பயணிக்க தேவையான எரிபொருளை கட்டுநாயக்க விமான நிலைத்தில் பெற விமானிகள் முடிவு செய்துள்ளனர்.
அதற்கமைய, இந்த விமானத்திற்கு ஒரு கோடியே 68 இலட்சம் ரூபா பெறுமதியான 62,800 லீற்றர் ஜெட் ஏ-1 எரிபொருளை வழங்குவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்கள் செலவிடப்பட்டுள்ளது. A 380 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 04.50 மணியளவில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு டுபாய் நோக்கி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.