இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்க பல சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அதிபரின் ஆலோசகருமான ருவன் விஜயவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெற்றதையடுத்து, இந்த உதவிகள் கிடைக்கப் பெறுமென கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் இன்றைய கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சி காரணமில்லை என ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அதிபர்களின் ஆலோசகர்களின் தவறான ஆலோசனையாலேயே இலங்கை இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் உதவி விரைவில் இலங்கைக்கு கிடைக்குமெனவும் அதனையடுத்து, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளின் உதவிகளும் கிடைக்கப் பெறுமெனவும் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.