கொழும்பில் தற்போது உள்ள நகர அடுக்குமாடி திட்டங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் அதன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கொழும்பில் பல வீட்டுத் திட்டங்களின் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே போதே தலைவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காலிங்க மாவத்தை – கொலொம்தோட்டை சரசவி தோட்டம், பொரளை சிரிசர தோட்டம் மற்றும் மெட்சர தோட்டம், தெமட்டகொட மிஹிது சென்புர மற்றும் சியபத் செவன, மாளிகாவத்தை லக்ஹிரு செவன, சியசெத செவன மற்றும் லக்செத செவன, புளூமெண்டல் சிறிமுத்து தோட்டம், சிரிசத தோட்டம், ஹேனுமுல்ல ரத்மித்து செவன, ஹெலமுத்து செவன, சன்ஹிரு செவன, ரந்திய உயன, மெத்சந்த செவன மற்றும் மிஹிஜய செவன, பெர்குசன் வீதி முவதொர உயன, ஒருகொடவத்த புரதொர செவன, கொலன்னாவ சன்ஹித செவன மற்றும் லக்சத செவன ஆகியவை வீட்டுத் திட்டங்கள் தலைவரினது கண்காணிப்பு விஜயத்தின் போது அவதானிக்கப்பட்டன.
இதன்போது இந்த வீடமைப்புத் திட்டங்களில் தற்போதுள்ள சில பிரச்சினைகளை அடையாளம் காண முடிந்தது.
அடுக்குமாடி திட்டங்களில் தற்போதுள்ள கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
சில வீட்டுத் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அனுமதியின்றி நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் தலைவரிடம் தெரிவித்தனர்.
இதன்படி தற்போது நிலவும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு ஒரு மாத காலத்துக்குள் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.