கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை ஆண்டு முழுவதும் சுற்றுலாத் தளமாக மாற்றும் திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.
பொருளாதார பின்னடைவு
சுற்றுலாத் துறையில் உயிர்வாழ்தல் மற்றும் சவால்களை சமாளித்தல் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலி மாவட்ட சுற்றுலாத் துறையைச் சேர்ந்த வர்த்தகர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, அண்மைய பொருளாதார பின்னடைவு காரணமாக சுற்றுலாத்துறையில் உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும், இத்துறையை புத்துயிர் பெறுவதற்கு திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் உறுதியளித்தார்.
சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்த்தல்
நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவழிக்கத் தயாராக உள்ளவர்கள் உட்பட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் வேலைத்திட்டத்தை கோடிட்டுக் காட்டினார்.
மேலும், உலகிற்கு இலங்கைக்கான சிறந்த விளம்பரத்தின் முக்கியத்துவத்தையும் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் வகையில் அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களை அவர் முன்னிலைப்படுத்தினார்.
சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு திரும்பக் கவர, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.