மட்டக்களப்பு மாநகர சபையின் இறுதி அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது திடீரென குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழத்தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் மாநகர சபையின் இறுதி அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இதன் போது நிதிக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்ட போதே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டு, சபை அமர்வில் இருந்து ரெலோ வெளியேறியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு மாநகர சபையின் இறுதி அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் நிதி குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, அதை நிறைவேற்றுமாறு சபையில் கோரிய போது, சபையில் இருந்த உறுப்பினர்கள் வாக்கெடுப்புக்கு விடுமாறு கூறியிருந்தனர்.
அதனையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதாக முதல்வர் தெரிவித்த நிலையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதன் போது ஏற்பட்டுள்ள பங்காளி கட்சிகளின் மோதல் காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதி முதல்வர் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், ரெலோ, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் வெளியேறிச் சென்றுள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களாக ஊழலற்ற மாநகர சபையாக திகழ்ந்த மட்டக்களப்பு மாநகர சபை, இன்றைய தினம் மிகவும் ஒரு கேவலமான முறையில் சென்றுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை இன்றைய தினம் சபையில் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நடந்து கொண்ட விதமும் மாவட்டத்திற்கும் மாநகர சபைக்கும் அபகீர்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தமிழரசு கட்சிக்கும் தற்போது புதிய கூட்டணியாகவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் முரண்பாடுகள் உக்கிரம் அடைந்துள்ளமையை அண்மைக்காலமாக அவதானிக்கக்கூடியதாகவுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.