இங்கிலாந்தில் மாயமான இலங்கை வீரர்களை தேடும் பணிஆரம்பம்!

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொள்ள சென்றிருந்த நிலையில் காணாமல் போன இலங்கை அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை கண்டுப்பிடிக்க மெட்ரோபொலிட்டன் பொலிஸாரும் மேற்கு மிட்லண்டீஸ் பொலிஸாரும் கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளுக்காக இலங்கை அணிகளின் நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.

இலங்கை ஜூடோ அணியின் முகாமையாளர் மற்றும் ஜூடோ வீராங்கனை,மல்யுத்த வீரர் ஆகியோர் முன்னதாக காணாமல் போயினர்.

கழிவறைக்கு செல்வதாக கூறி தப்பிச் சென்ற குத்துச் சண்டை வீரர்

கடந்த 5 ஆம் திகதி இலங்கை குத்துச் சண்டை அணியின் வீரர் ஒருவரும் காணாமல் போனதாக தெரியவருகிறது.

இந்த குத்துச் சண்டை வீரர், குத்துச் சண்டை போட்டி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என பயிற்சியாளரிடம் கூறி விட்டுச் சென்றுள்ளதுடன் திரும்பி வரவில்லை.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ள இலங்கை அணிகளின் வீர, வீராங்கனைகள் காணாமல் போவதை அடுத்து, அணிகளின் நிர்வாகிகள் விளையாட்டு வீரர்களின் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

காணாமல் போன குத்துச் சண்டை வீரரின் கடவுச்சீட்டும் அணி நிர்வாகிகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

10 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ள இலங்கை அணிகளின் வீரர்களில் இதுவரை சுமார் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

இலங்கை அணிகளின் வீரர்கள் உட்பட அதிகாரிகளுக்கு இங்கிலாந்தில் தங்கியிருக்க 150 நாட்களுக்கான விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை முன்னதாக காணாமல் போன ஜூடோ அணியின் வீராங்கனை மற்றும் பயிற்சியாளர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.

180 நாட்களுக்கான விசா அனுமதி இருப்பதால், அவர்கள் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இலங்கை எதிர்நோக்கி வரும் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அணியின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள், இங்கிலாந்தில் புகலிடம் கோருவதற்காக இவ்வாறு தப்பியோடி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor