தமிழ் மக்களது பலம் மிக்க கட்சியை நாங்கள் பலப்படுத்தவில்லையென்றால் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். 2023 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி சொல்லப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்திலே 2023ம் அஆண்டு நடைபெறப் போகும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சம்மந்தமாக பல களப் பணிகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம். நாங்கள் ஒவ்வொரு பிரதேசங்களாச் சென்று வட்டாரக் கிளைகளை நடத்தியிருந்தோமே தவிர வேட்பாளர் தெரிவிலே கலந்துகொள்ளவில்லை. அந்த அந்த வட்டாரக் கிளைகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களையே வேட்பாளர்களாக நியமித்திருக்கின்றோம்.
இன்று எமது கல்முனை மாநகரத்தின் இருப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. நாளுக்கு நாள் பலமிழக்கப்படுகின்ற ஒரு இனமாகவே இருக்கின்றோம். அந்த அடிப்படையில் விரைவில் எமது மக்களுக்கு இனிமையான செய்தியை அறிவிப்போம். அதற்கான முழு முயற்சியைச் செய்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் மேற்கொள்கின்ற விடயங்களை விளம்பரப்படுத்த விரும்பவில்லை. எமது மக்களின் நீண்டகாலப் பிரச்சனையாக இருக்கின்ற விடயங்களுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கியுள்ளோம்.
ஒரு உள்ளுராட்சி மன்றத்தின் வேட்பாளராக, உறுப்பினராக களமிறங்குபவர்கள் அந்த பிரதேசத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் முன்நிற்கும் குறிப்பாக அப்பிரதேசத்தின் தலைவராக இருந்து செயற்படும் தகைமை கொண்டவராக இருக்க வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற போது தான் அந்தப் பிரதேசத்திலே சிறந்த சமூகக் கட்டமைப்பை உருவாக்க முடியும். ஆனால் எமது தமிழினத்தைப் பொருத்தமட்டில் எங்களுக்குள் பல தடைகள் இருக்கின்றன என்பதை மக்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த வகையிலே மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் அந்த அந்த வட்டாரங்களைக் கட்டிக் காக்கக்கூடிய, எமது பிரதேசங்களில் எமது சமூகம் முகங்கொடுக்கும் அடங்குமுறைகளைத் தட்டிக் கேட்கக் கூடிய திறன்மிக்கவர்களாக இருக்க வேண்டும்.
எமது மக்களும் கடந்த கால அரசியற் செயற்பாடுகளை உணர்ந்து நடக்க வேண்டும். தமிழ் மக்களது பலம் மிக்க கட்சியை நாங்கள் பலப்படுத்தவில்லையென்றால் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எமது கட்சி வடக்கில் இருந்து வரும் தீர்மானங்களையே நடைமுறைப்படுத்துவதான பிழையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அது முற்றுமுழுதாக பிழையான விமர்சனமாகும். எந்தச் சந்தர்ப்பத்திலும் எமது தலைமைகள் எங்களை விடுத்து தீர்மானங்களை எடுப்பதில்லை. ஒவ்வொரு பிரதேசங்களினதும் சூழ்நிலைகளை அறிந்து அப்பிரதேசத்தவர்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று தான் சொல்லியிருக்கின்றார்கள். அதனைத் தவிர கட்டாயம் இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்ற ஆணையை அவர்கள் பிறப்பித்த வரலாறே இல்லை. எமது கட்சியைச் சிதைப்பதற்காக மாற்றுக் கட்சியினருடன் சேர்ந்து எமது கட்சியோடு பயணித்தவர்களும் தற்போது இந்தப் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
நாங்கள் எமது உரிமை, இருப்பு சார்ந்த விடயங்களோடு பயணிக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. கடந்த காலங்களில் 2008ம் ஆண்டு தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களை தமிழர்கள் என்று சொல்லி மாகாணசபைக்கு அனுப்பி ஆழச் செய்தோம். அந்த நான்கு வருடங்களும் அவர்கள் சொல்லிக் காட்டும் அளவிற்கு எந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனம். 2020இலும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களுக்கு வாக்களித்து தமிழத் தேசியப் பிரதிநித்துவங்களை இல்லாமல் செய்தோம். தற்போதும் என்ன நடந்திருக்கின்றது. நாடும், நமது தேசமும் அதள பாதாளத்திற்குள் சென்றிருக்;கின்றது.
தற்போது தமிழ்த் தேசிய எழுச்சி மக்கள் மத்தியிலே உருவெடுத்திருக்;கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு உன்னதமான வளர்ச்சியை இந்தத் தேர்தல் சொல்லும் அதே போன்று அம்பாறை மாவட்டமும் 2023 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எமது ஆணையை வழங்கியிருக்கின்றோம் என்ற செய்தியைச் சொல்ல வேண்டும்.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்த கட்சிகள் பபிரிந்து செயற்படுவதான பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள். நாங்கள் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமை காரணமாக ஒரு உத்தியைக் கையாண்டு தனித்தனியே கேட்கின்றோம். இந்தத் தேர்தல் முறைமையின் விளைவுகளை அனைத்து தரப்பினரும் சொல்லியிருக்கின்றார்கள். எனவே அந்த நிலைமைகளுக்கேற்பவே நாங்கள் கையாளுகின்றோமே தவிர எங்களை யாரும் பிரிக்கவும் இல்லை, நாங்கள் பிரியவும் இல்லை, பிரியப் போவதும் இல்லை.
அனைவருக்கும் தெரியும் இந்தத் தேர்தல் முறைமையில் சுயேட்சைக் குழுக்களில் கேட்டு மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் கூட ஆசனங்களைப் பெற்ற வரலாறு இருக்கின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விடக் கூடாது என்பதற்கான நடவடிக்கையே தவிர நிரந்தரப் பிரிவு அல்ல. எதிர்காலத்தில் நாங்கள் அதே ஒற்றமையுடன் செயற்படுவோம் என்று தெரிவித்தார்.