முட்டை இறக்குமதியை தடுத்த அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத அதிகாரிகள் தொடர்பான முழுமையான அறிக்கையினை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகைக் காலத்தில் முட்டைக்கான தேவை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும், நாட்டில் போதிய உற்பத்தி இல்லை என்றால், தட்டுப்பாட்டை சமாளிக்க தேவையான அளவு முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போது முட்டை உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த தட்டுப்பாட்டில் பணவீக்க அழுத்தம் ஏற்பட்டு முட்டையின் விலை அதிகரிக்கிறது. இது போன்ற சமயங்களில் தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவு இறக்குமதி செய்வதே சிறந்த முறையாகும். சொந்த நாட்டின் உற்பத்தி போதுமானதாக இல்லை என்றால், போதிய அளவுக்கு பெரிய தேவைகள் இருந்தால் கண்டிப்பாக விலைகள் அதிகரிக்கும்.

இது சிறு குழந்தைக்கும் தெரிந்த உண்மை. இந்தியாவில் இருந்து சிறிய அளவிலான முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக நேற்று அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டது. அவை சந்தைக்காக அல்ல.

ஆனால், மருத்துவமனைகள், பாடசாலையில் மதிய உணவு மற்றும் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும். அடுத்த வாரம் சம்பந்தப்பட்ட தரப்பினர் பற்றிய முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். உலகில் முட்டை ஏற்றுமதி செய்யும் நாடுகள் உள்ளன. முட்டை ஏற்றுமதியில் இந்தியா முதன்மையானது.

அதன்படி உலகின் பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒன்றை நம் நாட்டிற்கு கொண்டு வர முடியாது என்று யாராவது முடிவெடுத்தால், அதற்கான நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

Recommended For You

About the Author: webeditor