நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்
பேசும் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய 100 நாட்கள் மக்கள்
போராட்டத்தின் பிரகாரம் கடந்த 08.11.2022 அன்றைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள்
தழுவிய ரீதியில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக ‘ஐக்கிய
இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி
முறையிலான அதிகாரப் பகிர்வு’ வேண்டும் எனும் பிரகடனமானது வடக்கு கிழக்கு மக்களால்
இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் ஒலிக்கச் செய்யப்பட்டது.

மேற்படி பிரகடனத்தினை வலுச்சேர்க்கும் வகையிலும் அதனை வலியுறுத்தியும் நாம் பல தரப்பட்ட
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களை மேற்கொண்டும் பல்வேறு வகையான
கவனயீர்ப்புப் போராட்டங்களை நடாத்தியும் வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், கொழும்பிற்கு வருகை தருகின்ற நிலையில் நாளைய தினம் (20.01.2023) காலை 10.30 மணிக்கு வடக்கு
கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் ‘இந்தியா மற்றும் ஐ.நா.ம.உ. பேரவையின்
மையக்குழு நாடுகளே ! ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு
மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை உறுதிப்படுத்த இலங்கைக்கு
ஒத்துழைப்பு வழங்குக ‘ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடாத்த உள்ளோம்.

எனவே சகல ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள், மனித
உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இக் கவனயீர்ப்பு நடவடிக்கைகளுக்கு
ஆதரவு வழங்குமாறு வேண்டுகின்றோம் என இலங்கை
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
கண்டுமணி லவகுசராசா அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor