வரலாற்றிலேயே முதல் தடவையாக அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட தினத்துக்குள் செலுத்த முடியாது போயுள்ளதாகவும் நிறைவேற்று அதிகாரம் அல்லாத ஊழியர்களின் சம்பளத்தை குறிப்பிட்ட தினத்தில் செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளத்தை செலுத்துவதற்கு தாமதமாகியுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்த்தன நேற்று (17) தெரிவித்தார்.
அரச தகவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிய தரும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கே இலங்கை அரசாங்கத்துக்கு முடியாதுள்ளது
நாட்டின் அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கே இலங்கை அரசாங்கத்துக்கு முடியாதுள்ளதென தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன நிதி நடவடிக்கைகள் முடிவடைந்த டிசம்பர் மாதத்தில் திறைச்சேரிக்கு வருமானமாக 147 பில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதில் 88 பில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதற்கும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சமூர்த்தி கொடுப்பனவுகளுக்கு 30 பில்லியனும் உரத்தைப் பெற்றுக் கொள்ள 6.5 பில்லியனும் சுகாதார அமைச்சுக்கு அத்தியாவசியமான மருந்து வகைகளுக்காக 8.7 பில்லியனும் ஏனைய செலவுகளை உள்ளடக்கி 154 பில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.
திறைசேரியின் வருமானம் 147 பில்லியன் ஆக இருந்தபோதும் செலவு 154 பில்லியன் என்றால் அந் நிலைமையை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது? என்ற கேள்வி எழுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நிதி வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு செலவிடப்பட்ட தொகையை உள்ளடக்காமலேயே கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்காக டிசம்பர் மாதத்தில் 182 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை பெறுவதற்காக 10 பில்லியன் ரூபாவை பெற்றுத் தருமாறு சுகாதார அமைச்சர் அமைச்சரவையில் கோரிக்கை விடுத்திருந்தாலும் அதற்கான பணத்தைப் பெற்றுக் கொடுக்க திறைசேரியிடம் பணம் இல்லயென்றும் அதற்கு மாற்று வழியாக வரவு செலவு திட்டத்தின் மூலம் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 1% வீதத்தை கறைத்து அந்நிதியை பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து 5% ஐ வெட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த 1% தத்துடன் மொத்தமாக 6% வீத ஒதுக்கீடுகள் வெட்டப்படும். ஓய்வூதிய கொடுப்பனவுகள் 2000ஆம் ஆண்டு 152 பில்லியன், 2005ஆம் ஆண்டு 185 பில்லியன், 2010ஆம் ஆண்டு 478 பில்லியன் என அதிகரித்ததாக குறிப்பிட்டார்.
இந்த அமைச்சரவையில் மின்வலுமற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர மின் கட்டண பட்டியல் தொடர்பாக பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழு இதுவரை உடன்பாட்டுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் கடந்த அமைச்சரவையில் முன் வைக்கப்பட்ட வேளையில் அவருக்கு அமைச்சரவை , பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி மின்கட்டண அதிகரிப்புத் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறு கூறப்பட்டது ஆனால் அதற்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை.