இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் சர்வதேச திணைக்களத்தின் துணை அமைச்சர் சேங் ஷூ தலைமையிலான பிரதிநிதிகள் இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
இருத்தரப்பு ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது பற்றி பேசினோம்-சீனத் தூதரகம் அறிக்கை
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, இருத்தரப்பு ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது என இலங்கைக்கான சீனத் தூதகரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு கட்சிகள் என்ற வகையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகவும் தூதரகம் கூறியுள்ளது.
இதனை தவிர சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு தொடர்பாக இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கு விளக்கும் நிகழ்ச்சி இன்று கொழும்பில் நடைபெற்றது.
எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே சீனாவின் முதலீடுகள் இலங்கையில் அதிகரித்தன.
அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு தாமரை கோபுரம் என மிகப் பெரிய திட்டங்கள் அந்த காலத்திலேயே சீனாவுக்கு வழங்கப்பட்டன.
மேலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், சீனாவிடம் இருந்து பெருந்தொகை நிதியையும் கடனாக பெற்றுக்கொண்டது.