செங்கலடி, கரடியனாறு பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட புல்லுமலை பிரதேசத்தில் நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் உடலை கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகளும் அகீல் அவசர சேவைப்பிரிவும் இணைந்து மீட்டுக்கொடுத்த சம்பவமொன்று நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
செங்கலடி, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புல்லுமலைக்கு உறவினர்களுடன் பொழுதைக் கழிக்க நிந்தவூரிலிருந்து வருகை தந்த நிந்தவூர் காட் வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆதம் லெப்பை அர்பான் என்பவர் படகு சவாரியின் போது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தார்.
சுமார் பகல் வேளையில் காணாமற்போன குறித்த இளைஞனைத்தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்த போதும், நீண்ட நேரமாகத்தேடியும் கிடைக்காத நிலையில், சுமார் 07.30 மணியளவில் கல்குடா டைவர்ஸ் மற்றும் அகீல் அவசர சேவைப்பிரிவின் உதவியை நாடியிருந்தனர்.
24 மணி சேவை வழங்கி வரும் அவர்கள் உடனடியாகச்செயற்பட்டு கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகள் சகிதம் அகீல் அவசர சேவைப்பிரிவு வாகனத்தின் உதவியுடன் ஓட்டமாவடியிலிருந்து பல மைல் தொலைவிலுள்ள புல்லுமைக்குச்சென்று டைவர்ஸ் அணியின் பொறுப்பாளரும் விஷேட சுழியோடியுமான கபீர் முஹம்மத் பௌஸ்தீன் மற்றும் விஷேட சுழியோடியும் உயிர்காப்பு
வீரருமான கபீர் முஹம்மத் இப்றாஹீம் ஆகியோர் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
பகல் வேளையிலிருந்து தேடியும் கிடைக்காத நிலையில் கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகளின் தீவிர தேடுதல் முயற்சியினால் பத்து நிமிடத்திலேயே உடலைக் கண்டுபிடித்து கரையேற்றிக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகளால் மீட்கப்பட்ட இளைஞனின் உடல் மேலதிக விசாரணைக்காக கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிரதேச பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான அலி ஸாஹிர் மெளலானா, பைஷல் காஸீம் அவரது இணைப்பாளர் எம்.கபீர், கல்குடா டைவர்ஸ் அணியின் பொறுப்பாளர்கள், அகீல் அவசர சேவைப்பிரின் உரிமையாளர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார் மற்றும் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.