உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட முக்கிய தகவல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு கடமைகள் காரணமாக வழங்க வேண்டிய தொகை இதுவரை வழங்கப்படவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

அதன் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டிய பணம் இதுவரை கிடைக்கப்பெறாத காரணத்தினால் பொலிஸ் திணைக்களம் நிதிப் பிரச்சினையில் சிக்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

அத்தோடு, நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் பணிகளை ஆரம்பிக்கும் முன்னர் கடந்த பொதுத் தேர்தலுக்கான பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது கீழ் மட்டத் தேர்தல் என்பதால் பல்வேறு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டால் விசேட அதிரடிப் படையினரை வரவழைக்க வேண்டும். கட்டுப்படுத்த முடியாவிட்டால் இராணுவத்தினரைக் கூட வரவழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல், தேர்தலின்போது பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பர பதாகை, பேனர்களை அகற்றும் பணியை கூலித் தொழிலாளர்கள் செய்வதாகவும், அவற்றுக்கான கட்டணம் முதலில் பொலிஸாரிடமிருந்தும் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் இருந்தும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor