மலர்ந்துள்ள தமிழர் திருநாளில் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய பரினாமமொன்றை எடுத்துள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நன்நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாகவும், ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள கூட்டமைப்பு தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் போராளிகள் என்ற ரீதியில் எங்கள் தலைவர் வழியே ஜனநாயகப் போராளிகளின் எண்ணப்பாடுகளும் இருக்கும். தமிழ் மக்களின் அரசியல் ரீதியான நடைமுறைகளுக்கு தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையே பலம் சேர்க்கும் என்ற தீர்க்கதரிசனத்தினாலேயே தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்.
ஆனால் புலிகளின் மௌனத்திற்குப் பின்னர் ஒவ்வொரு கட்சிகளும் அவரவர் தனி நிலைப்பாடுகளையே பேணி வந்தனர். அதன் உச்சகட்டமே தற்போது இடம்பெற்று தமிழரசின் தனி வழி நிலைப்பாடு தோற்றம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கமும், நோக்கமும் பற்றி அறியாதவர்களின் நடவடிக்கைகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறியிருக்கின்றது. தமிழரசு சென்றால் ஒற்றுமை இல்லை என்ற நிலைப்பாடு எவருக்கும் தோன்றிவிடக் கூடாது. இந்த நிலையிலேயே ஏனைய கட்சிகள் ஒரு நிலைப்பாட்டில் ஒற்றுமைப்பட நேரிட்டது.
அந்த ஒற்றுமைக்காக தலைவர் வழி நின்ற நாங்களும் கைகோர்த்து எமது மக்களுக்கான முடிவை எடுத்தோம். இன்றைய தினம் அவ்வாறு ஒன்றிணைந்த கட்சிகள் ஒரு உடன்பாட்டிற்கு வந்து ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தற்போது ஒருசேர இணைந்திருக்கும் கூட்டமைப்பு இதே போல் எதிர்காலத்திலும் ஒருமித்துப் பயணித்து. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முனைப்போடு செயற்பட வேண்டும் என வாழ்த்துவதோடு, அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இன்றைய தினம் கையெழுத்திட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று (14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கூட்டணி ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.
இந்த கூட்டணி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.