அம்பாறை மாவட்டத்தில் ஏழு உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய இலங்கை தமிழ் அரசுக் கட்சி!

அம்பாறை மாவட்டத்தில் ஏழு உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழ் அரசக் கட்சி செலுத்தியுள்ளது. தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசயக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இக்கட்டுப் பணத்தை அம்பாறை மாவட்ட செயலகத்தில் செலுத்தியுள்ளார்.

இதன்போது அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் அம்பாறை மாவட்டத்திலே இருக்கின்ற கல்முனை மாநகரசபை, காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், நாவிதன்வெளி, சம்மாந்துறை போன்ற ஏழு உள்ளுராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழ அரசுக் கட்சி சார்பாகச் செலுத்தியிருக்கின்றோம்.

கடந்த காலங்களிலே எமது மக்களின் விடயங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்நின்றதுடன், எம்மால் முடிந்த சில பணிகளை நாங்கள் செய்திருக்கின்றோம். ஏனையவர்கள் தேர்தல்களுக்காக மாத்திரம் வலம்வருவதும் தேர்தல் முடிந்த கையோடு அவரவர் வேலைகளைப் பார்க்கும் செயற்பாடுகளே கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விடயங்களையெல்லாம் கருத்திற்கொண்டு மக்கள் ஒற்றுமையாக எமது தாய்ச்சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து நமது கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டிய கடப்பாடு எமது மக்களுக்கு இருக்கின்றது.

குறிப்பாக இம்முறை தேர்தலில் அந்;த அந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்களே அந்த பிரதேசத்திற்குரிய வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் ஏழு பிரதேச சபைகளிலும் இந்த கையாளுகை கையாளப்படுகின்றது. நாங்கள் மக்கள் விரும்புகின்றவர்களாகவும், கட்சிப் பற்றாளர்களாகவும், எமது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும், மக்கள் பிரச்சனைகளை தளத்தில் நின்று முகங்கொடுக்கக் கூடியவர்களாவும் இருப்பவர்களையே வேட்பாளர்களாக நிறுத்துவதோடு மக்களின விருப்பத்திற்கேற்றவாறே இச்செயற்பாடுகள் இடம்பெறம் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor