கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நாட்டில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
சந்தேகநபர் தப்பியோட்டம்
இவ்வாறு வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமான முறையில் சிறுநீரகத்தை பெற்றுக்கொண்ட வழக்கின் பிரதான சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள இவர், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விமான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அத்துடன் பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த சிறுநீரக கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும், வைத்தியசாலையில் பணி புரியும் மூன்று ஊழியர்கள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.