கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாமல் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கலைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஐந்து வீட்டுத் திட்டங்களின் கீழ் ஆயிரத்து 996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.
சீன அரசின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. சீன அரசாங்கம் 552 மில்லியன் யுவான் கடனுதவியை வழங்கும்ரூபவ் அதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1888 வீடுகளும், பழம் பெரும் கலைஞர்களுக்கு 108 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பேலியகொட, மஹரகம, மொரட்டுவ, தெமட்டகொட ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் கொட்டாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.