முட்டை விலை குறைக்காது விடின் வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படும் வாய்ப்பு!

முட்டை பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் தலைவர் என்.கே ஜயவர்தன ஜாஎலயில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முட்டை விலை
முட்டையொன்று 55 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் 70 ரூபாவுக்கே முட்டையை கொள்வனவு செய்து வருகின்றோம்.

நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடு பாரியளவில் உள்ளது எனவே நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடு நீங்கும் வரையில் இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முட்டையினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வெதுப்பக உற்பத்திகளினதும் விலைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor