இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களால் பெறப்பட்ட 767 கோடி ரூபா கடன் தொகை மீள செலுத்தப்படாமல் தற்போது வரை நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கிடங்கு முனைய நிறுவனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களால் பெறப்பட்ட பல கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், நிர்வாகத்திற்கு சரியான நிதிக் கொள்கை ஏற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திரக் கடன் தவணை மற்றும் இதர விலக்குகள் ஊழியரின் சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றாலும், ஊழியர்களின் மாதக் கடன் தவணை சம்பளத்தில் 50 சதவீதத்தைத் தாண்டியதாக ஜூலை 1, 1985 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண் 1063 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக நேர வேலைகள்
கடன் தொகையை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் முழுமையாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ மீளச் செலுத்துவதற்கு பயன்படுத்த வேண்டியிருப்பதன் காரணமாக மேலதிக நேர வேலைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினுமு் கடனைத் திருப்பிச் செலுத்துவதைப் புறக்கணித்து முறையற்ற கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், ஊழியர்களை கடன் வாங்கத் தூண்டிய போதிலும் நிறுவனங்களின் மேலதிக நேரச் செலவுகள் தேவையில்லாமல் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரண்டு நிறுவனங்களின் ஊழியர்களும் கடனை செலுத்தத் தவறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும், அதனை நிர்வகிப்பதற்காக தேவையற்ற வகையில் வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்களின் கடன் திட்டத்தை வணிக வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பாக கணக்காய்வு அலுவலகம் பல தடவைகள் ஆராய்ந்தும், பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.