மோசடி பத்திரங்களை பதிவு செய்யும் சார் – பதிவாளர்கள், சிறை செல்ல தயாராக இருக்க வேண்டும்’ என, பதிவுத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப் பதிவு மோசடிகளை தடுக்க, பதிவுத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஆள்மாறாட்டம் செய்வதை தடுக்க, பதிவு நிகழ்வுகள் வீடியோ பதிவாக ஆவணப்படுத்தப் படுகின்றன.இருப்பினும், பல இடங்களில் ஒருவருக்கு சொந்தமான சொத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து, அடுத்தவர் பெயருக்கு பதிவது பரவலாக தொடர்கிறது.
குறிப்பாக, நீதிமன்ற தடையுள்ள சொத்துக்களை, தவறான வழிகாட்டுதல் அடிப்படையில், சார் – பதிவாளர்கள் பதிவு செய்து கொடுக்கின்றனர்.
பதிவுத் துறையில் தலைமையகத்தில் உள்ள சில மூத்த அதிகாரிகள், இதற்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதும் தெரிய வந்து உள்ளது. மோசடியாக சொத்துக்கள் பதிவாவது குறித்து புகார் செய்வோரை, சார் – பதிவாளர்கள் தரக்குறைவாக திட்டி, விரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நிலங்களை அபகரிப்போர் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள், நில மோசடி புகார் அளிக்கையில், சார் – பதிவாளர்களை முதல் குற்றவாளியாக சேர்க்கின்றனர். தற்போது, 10க்கும் மேற்பட்ட சார் – பதிவாளர்கள், வழக்கில் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளனர். நில மோசடியில் சிக்கினால், ‘சஸ்பெண்ட்’ செய்வர்; அதிகபட்சம், ‘டிஸ்மிஸ்’ தான் செய்வர் என்று, சார் – பதிவாளர்கள் அலட்சியமாக உள்ளனர்.
அரசு நிலங்கள் அபகரிப்பில் சிக்கினால், சிறை செல்ல வேண்டும் என்று, சமீபத்தில் நடந்த சீராய்வு கூட்டத்தில், அமைச்சர் மூர்த்தி பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இதை கவனத்தில் வைத்து செயல்படுமாறு, சார் – பதிவாளர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.