தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் நேற்று இரவு 11.30மணியளவில் ஒரு சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இச்சூறாவளிப் புயல் மென்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இப்புயல் திருகோணமலையிலிருந்து கிழக்காக 370கிலோ மீற்றர் தூரத்திலும், நெட்டாங்கு 9.2பாகை வடக்காகவும், அகலாங்கு 84.6பாகை கிழக்காகவும் மையம் கொண்டுள்ளது.
இப்புயலானது மேற்கு, வடமேற்கு திசைகளில் நகர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசக் கரையை 9ஆம் திகதி இரவு ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் தாக்கத்தினால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டம் காணப்படுவதுடன் வடக்கு, வடமத்திய , கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்திலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 100மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 50கிலோ மீற்றர் வேகத்தில் அவ்வப்போது காற்று வீசக் கூடும்.
மேல்மாகாணத்திலும், காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மன்னர் முதல் காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் மீனவ சமூகத்தினரும், கடலில் பயணம் செய்வோரும் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மேற்குறிப்பிட்ட கடற்பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5மீற்றரில் இருந்து 3.5மீற்றர் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை வீழ்ச்சி பதிவாகி வருவதனால், ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்து காணப்படுவதுடன் சில வீதிகள் தற்காலிகமாக போக்குவரத்துக்குத் தடைப்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதால் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.