ஜனாதிபதி தொடர்பில் குற்றம் சாட்டும் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்!

ராஜபக்சர்களைப் போல் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டையும், மக்களின் வாழ்வையும் நாசப்படுத்தி வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மொட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று மக்கள் நினைத்த போதிலும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கிய அந்தத் தரப்பினர் தங்களது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டனர்.

பொருளாதார நெருக்கடி

ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொறுப்பை ஏற்றால், சர்வதேச ரீதியில் நட்புறவைப் பேணி, சர்வதேச அளவில் நிதி உதவிகளைப் பெற்று நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பார் என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தது.

எனினும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு டொலர் இருப்பை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது என்ற கேள்வியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுப்பியுள்ளார். இது உண்மையில் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

நாட்டின் சொத்துக்கள் விற்பனை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கின்றார். ரணில் விக்ரமசிங்க என்பவர் ஆரம்பத்திலிருந்தே நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நபர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களிலும் நாட்டின் சொத்துக்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்தார். விவசாய பொருளாதாரம் பலம் பெற்றதா? நாட்டு மக்களின் வயிறு நிரம்பியதா? நாட்டு மக்களின் சட்டைப் பைகளுக்கு பணம் சென்றதா? நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தமை ஊடாகப் பெற்றுக் கொண்ட பணம் எங்கு சென்றது என்பதை மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் தற்போது நட்டம் என்ற போர்வையில் இலாபம் ஈட்டும் நிறுவனங்களையே விற்பனை செய்ய ரணில் விக்ரமசிங்க முயலுகின்றார் என்று தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor