அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
சிட்னி நகரிலுள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து 31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பிணை நிராகரிப்பு
இன்று அவர் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது, முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி, சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேக நபரான தனுஷ்க குணதிலக்க டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குணதிலக்கவுக்கு எதிராக நடவடிக்கை
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் தனுஷ்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.