யாழ். தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணின் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (27.10.2022) பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்டவர் எனவும், திருமணத்தின் பின் தற்போது தெல்லிப்பழை பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு
கைது செய்யப்பட்டவர் ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் அரைப்பவுண் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்ததாக கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் சந்தேகநபர் தலைமறைவாகி இருந்ததனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இச்சம்பவமானது காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் காங்கேசன்துறை பிராந்திய புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கு உள்ளதாகவும், அவர் மேலும் பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.