பொதுவாகக் கலைஞர்கள் மறைவதில்லை, அவர்களது படைப்புக்களூடாக நம்மிடையே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எனக் கூறுவது பொருத்தமானதாகும். அந்த வகையில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கலைக்காகவே அர்ப்பணித்து, ஓவியக்கலை வரலாற்றில் தனக்கென்று ஒரு அழிக்கமுடியாத இடத்தைப் பதித்து விட்டுச் சென்றவர் ஓவியர் ஆசை இராசையா அவர்கள்.
ஓவியர் அவர்களது துறைசார்ந்த சாதனைகள், நுட்பங்கள், அவருக்கே உரிய தனித்துவமான பாணி ஆகியன பற்றி பலர், பல தடவைகள் பத்திரிகை வாயிலாகவும், நேர்காணல் மூலமாகவும் இன்றும் பகிர்ந்த வண்ணமே உள்ளனர்.
ஓவியர் ஆசை இராசையா அவர்கள் ஓவியக்கலை உலகில் நிரப்ப முடியாத நீண்ட ஒரு இடைவெளியினை விட்டுச் சென்றுள்ளார் என பல கலைஞர்கள் வாயிலாக கூறப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதுவே இக்கலை சாம்ராஜ்யத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அவர் வாழ்ந்த காலத்தில் பெற்ற கௌரவங்கள், விருதுகள் ஏராளம். அவர் வாழும்போதே அக்கௌரவத்தினை வழங்கி அவரைக் கொண்டாடிய இக்கலை உலகிற்கு அவரது மகளாக எனது முதற்கண் நன்றிகள்.
‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ என்ற திருவள்ளுவரின் வாக்குக்கமைய ஓவியர் ஆசை இராசையா அவர்களது மகளாக, இன்றைய தினம் பல நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
அப்பாவின் மறைவிற்குப் பின்னர் என்னைப் பலர் பல தடவைகள் கேட்டிருப்பார்கள், அப்பாவுடனான உங்களது அனுபவத்தினை எழுதத் தொடங்கலாமே என்று.
எழுதுவதற்கு நிறையவே உண்டென்றாலும், அதனை எழுதுவதற்கான மன வலிமை என்னிடம் இல்லை. எழுதத் தொடங்கலாம் என ஆரம்பித்த போதும் கூட எனது தொண்டை கனத்து கண்களினால் வழியும் கண்ணீரை கட்டுப்படுத்தும் மன உறுதி இன்னும் எனக்கு வரவில்லை. இனியும் இக்கவலைகளை மட்டும் சுமந்திருப்பேனானால், அவருக்கு என்னால் செய்ய வேண்டியுள்ள கடமைகளிலிருந்து தவறிவிடுவேன் என்பதனாலும் இப்பதிவினை வெளியிட விளைந்துள்ளேன்.
இன்றைய இந் நன்நாளில் என் தந்தைக்கு கிடைக்கும் ஒரு கௌரவத்தினை இங்கு பதிவுசெய்வதில் பெருமை கொள்கின்றேன். வருடா வருடம் நடைபெறும் யாழ் மாவட்ட கலாசார விழாவானது இவ்வருடம் ராஜா கிறீம் ஹவுஸில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவின் அரங்க நாயகனாக ‘ஓவியர் ஆசை இராசையாவின் பெயரினைத் தெரிவு செய்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றேன். இத்தெரிவுக்கு ஓவியரின் பெயரினை முன்மொழிந்த கலாசார உத்தியோகத்தர் திரு.அ.சிவஞானசீலன் அவர்களுக்கும், கலாசார உத்தியோகத்தர். திருமதி.செ.தக்ஷாயினி அவர்களுக்கும், இக்கருத்தினை ஏற்றுக்கொண்டு ஆமோதித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் கலாசாரப் பேரவை உறுப்பினர்களுக்கும் குறிப்பாக அரங்க உரை நிகழ்த்தும் என் தந்தையின் ஆத்ம நண்பர்களில் ஒருவரான கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களுக்கும் என் தந்தையின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்து கலை உள்ளங்களும் இன்றைய தினம் ஓவியரை மீள்நினைத்து கண்கள் பனித்திருப்பார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
மேலும், கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் அப்போதிருந்த யாழ்.இந்துக்கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கமைய அக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஸ்தாபகர்கள் 18 பேரின் உருவப் படங்களை எண்ணெய் வர்ண ஓவியங்களாக வரைந்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் ஓவியங்கள் இன்றும் யாழ் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வாறாக இந்துக் கல்லூரிக்கும் என் தந்தைக்கும் இருந்த நல்லுறவு இன்று அக்கல்லூரியிலே அவர் சிறப்பிக்கப்படுவது பெருமைக்குரிய விடயமாகும். அண்மையில் யாழ் இந்துக் கல்லூரிக்குச் சென்று அவ் ஓவியங்களை பார்வையிட்டு அவற்றினை புகைப்படம் எடுப்பதற்கு எனக்கு அனுமதியளித்த அக்கல்லூரி அதிபர் திரு.இ.செந்தில்மாறன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
மேலும், எனது தந்தையின் இறப்பின் பின் அவரது ‘விம்பம்’ நூலுக்கு ‘சுயநானாவித விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. உண்மையில் அந்நூலினை அவர் உயிருடன் இருக்கும்போது அவருக்கே தெரியாமல் விருதுத்தெரிவுக்கு சமர்ப்பித்த காப்பியக்கோ கவிஞர்.ஜின்னா nஷரிப்புத்தீன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையேன். இதற்கப்பால் கவிஞருக்கும் ஓவியருக்கும் இடையில் இருந்த அண்ணன் – தம்பி உறவு இன்றைக்கும் தொடர்வது நாம் பெற்ற பேறே.
‘ஒரு கலைஞன் என்பவன் அவனது படைப்பாற்றலை (Creativity) தனது கலைகளினூடாக வெளிப்படுத்துவதுடன் அவனுக்கேயான பாணியினை(Individual Style) உருவாக்க வேண்டும்’ என அவர் அடிக்கடி கூறிக்கொள்வது வழக்கம்;
அதாவது, எந்தவொரு கலையாயினும் காலப்போக்கில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்தல் வேண்டும். வெறுமனே குருவிடம் கற்றதை கிளிப்பிள்ளை போன்று ஒப்பிப்பது ஒரு உண்மையான கலைஞன் அல்ல என அவர் கற்பிக்கும் மாணவர்களுக்கும் சரி, மகளாகிய எனக்கும் சரி அறிவுரை கூறுவதுண்டு.
உண்மையில் ஓவியக்கலையினைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு அவரது படைப்புக்கள் இன்றும் உணர்த்திய வண்ணம் உள்ளன. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் சிலர் தமது விடுமுறையில் இலங்கைக்கு வருவதுண்டு. அவர்கள் எமது இல்லத்துக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் என் தந்தையிடம் ‘இன்னும் நீங்கள் வரைகிறீர்களா? என அறிவிலித்தனமான கேள்வியைக் கேட்பார்கள். அதற்கு என் தந்தை ‘என்ன கேள்வி இது? ஓவியம் வரையவில்லையென்றால் நான் இறந்திருப்பேன் என நினையுங்கள்’ என நியாயமான கோபத்துடன் பதிலளிப்பார்.
அவரது ஓவியங்களில் மட்டுமல்ல, கவிதை வரிகளிலும் எனக்கு ஈர்ப்பு அதிகம். அந்த வகையில் எனது ஆழ்மனது வரை தாக்கத்தை ஏற்படுத்திய இந்த உணர்வுபூர்வமான வரிகள் எத்தனை தடவை வாசித்தாலும் புதிதாக வாசிப்பது போன்ற உணர்வே வருவதுண்டு.
எனது தாயார் தனது பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அச்சந்தர்ப்பத்தினை அவர் பின்வரும் கவிதை வரியில் குறிப்பிட்டிருந்தார்.
விதி
ஏழாண்டுகள் கழித்து
என் மனைவி கருவுற்றாள்.
ஆனால்,
பிறப்பது,
ஆணா? பெண்ணா?
எனக்குள் ஒரு ஏக்கம்.
பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாத பெண்
மலடி என ஒதுக்கி வைக்கப்படுவதும்,
கணவனை இழந்த பெண்ணை விதவையென ஒதுக்குவதும்,
காலங்காலமாக அரங்கேறும் நடத்தைக் கோலங்கள்.
சீதனக் கொடுமையால் எத்தனை பெண்களின் வாழ்வு
கேள்விக்குறியாகிவிட்டன.
‘ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி’
மாதச் சம்பளத்தை நம்பி வாழும் ஒரு கலைஞன்
ஒரு பெண்ணுக்காயினும் சீதனம் சேர்க்கமுடியுமா?
பலதையும் எண்ணிக் கலங்கியது மனம்.
ஆயினும்,
கர்ப்பிணிப் பெண்ணானவள்
இருப்பது, நடப்பது, படுப்பது இவற்றை வைத்தே
அவள் கருவில் சுமப்பது ஆணா பெண்ணா?
எனக் கூறும் ஐதீகம் கூறியது –
என் மனைவி சுமப்பது ஆண் குழந்தையே யென்று.
சேதி கேட்டு ‘யாழ்தேவி’ யில் புறப்பட்டவன்
அதிகாலை ஐந்து மணியளவில்
யாழ் மண்ணில்,
மகப்பேற்று விடுதியில் மனைவி.
சத்திரசிகிச்சை வலியிலும்
முகத்தில் ஒரு பூரிப்பு.
மனம் இலேசாகியது.
ஆண்டவனுக்கு நன்றி.
ஆனாலும்,
தொட்டிலில் துயிலும் குழந்தையை எட்டிப் பார்த்தவனை
பெண் குழந்தை வடிவில்
கைகொட்டிச் சிரித்ததாம் விதி.
ஆண் வாரிசை எதிர்பார்த்த ஒரு தந்தையின் ஏக்கம் பெண் வாரிசைக் கண்டதும் தனது உயிர் மகள் தானெனக் கொண்டாடும் அளவிற்கு மாறியது. ஒவ்வொரு நொடியும் எனக்காகவே வாழ்ந்தார். எனது தந்தை கொழும்பு றோயல் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்ததன் காரணமாக நான் பிறந்த பின் எனது அம்மாவும் நானும் எங்களது ஏனைய குடும்ப உறுப்பினர்களுடனேயே ஊரிலேயே வசிக்க வேண்டி இருந்தது. எனது மழலைப் பருவ புகைப்படங்கள் என் அத்தைமார்களால் அப்பாவிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அப்புகைப்படத்திற்குப் பின்னால் கவிதை வடிவில் தனது பாசத்தை இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பார். ‘புள்ளிச் சட்டையழகா? இந்தப் புள்ளிமான் கன்றழகா?’ , ‘வீணை இசை பழகட்டாம் இந்த வேலையற்ற அப்பாவும், வீணையின் தந்தி இந்த மென்விரலை வெட்டாதோ?’ இவ்வரிகளெல்லாம் எனது அப்பாவின் வாயாலே நான் நிறைய தடவைகள் கேட்டதுண்டு.
அவரைக் கலைஞனாக பார்த்து வியந்த பலர் அவரது வாழ்வியல் முறைமையினையும் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. ‘கண் பார்த்தால் கை செய்தல் வேண்டும்’ என எனது தந்தையின் தாயார் கூறுவதற்கமைவாக, எந்த ஒரு செயற்பாட்டினையும் நேர்த்தியாகச் செய்து முடிக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது.
புகைப்படத்துறையில் இயல்பாகவே ஈடுபாடு உண்டென்பதால் அவரது புகைப்படங்கள் பல போட்டிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு பரிசில்களைப் பெற்றுக் கொண்டது. யோகக்கலையினை முறைப்படி பயின்றதோடு மட்டுமல்லாமல் அது தொடர்பான பல நூல்களைக் கற்றதுடன் தினமும் யோகப் பயிற்சியினை கிரமமாக செய்துவந்தார். ஆடை வடிவமைப்பினையும் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் செய்துவந்தார்.
இறுதிக்காலம் வரை தனது ஆடைகளை தானே வடிமைத்து அணிந்து வந்தார். இதே சமயங்களில் எனக்குரிய ஆடைகளை வடிவமைத்து எனக்கு அணிவித்து அழகு பார்க்கவும் தவறியதில்லை. சமையல் துறையில் அவரது கைப்பக்குவமே தனி ருசி. எப்பொழுதும் அவரது நண்பர்களையோ, எனது நண்பர்களையோ வீட்டுக்கு அழைத்து தானே சமைத்த உணவைப் பரிமாறுவதில் அவருக்கு அலாதி பிரியம்.
அவரது இறுதி நாட்களில் கூட வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் முதல்நாள் வரைக்கும் வரைந்த வண்ணமே வாழ்ந்தார். இறுதியாக அவர் தனது சுய பிரதிமை
(Self Portrait) ஓவியத்தினை வரைந்து கொண்டிருந்தார். அவ் ஓவியத்தினை அவரால் நிறைவு செய்ய முடியவில்லை.
ஆனால் முற்றுப் பெறாத ஓவியத்தின் மூலம் அவரது உள்ளார்ந்த உணர்வுகள் யாவுமே எம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். “Incomplete work with complete feelings of him – as his life” தனது வலது கை செயலிழந்து வரும் தருவாயில் கூட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது என்னிடம் அடிக்கடி கூறிக்கொள்வார் ‘மகள் எனது வலது கை செயலிழந்து வருகின்றது, நான் இடது கையினால் வரையப் பழகப்போகிறேன்.
கேரள ஓவியக் கலைஞர் ஒருவரும் தனது வலது கை பாதிப்பிற்குப் பின்னர் இடது கையினால் வரையத் தொடங்கினார். அவர் வலது கையினால் வரைந்த ஓவியங்களை விட இடது கை ஓவியங்கள் பலராலும் பேசப்பட்டது.
ஒருவேளை எனது இடது கை ஓவியங்கள் ஓவியக்கலை வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம்.’ எனக் கூறினார். அவர் அவ்வாறு என்னிடம் கூறும் போது அவரது மன உறுதியினை நினைத்துப் பெருமைப்படுவதா?, இல்லை, அதற்கான காரணம் அந்த உயிர்க்கொல்லி நோய் என அவருக்கே தெரியாமல் எனக்குள் நானே அழுதபடி பரிதவித்து நின்றதைக் கூறவா? என தொண்டை கனத்தபடி, கலங்கிய என் கண்களை அவருக்குத் தெரியாமல் துடைத்தபடியே, ‘அப்பா, நீங்கள் எதுக்கும் கவலைப்பட வேண்டாம், உங்களது இந்த மன வலிமை இருக்கும் வரை இயற்கையால் கூட உங்களை நெருங்க முடியாது’ என கடவுளிடம் பரிபூரண சரணாகதியாகியபடி ஆறுதலளித்தேன்.
நான் பிறந்ததிலிருந்து அப்பாவின் இறுதி நாட்கள் வரைக்கும் அவரின் கைகளைக் கோர்த்தபடி வாழ்ந்த சந்தர்ப்பங்கள் மட்டுமே அதிகம். ‘அப்பா’ எனும் எந்தவொரு வரையறையும் இன்றி ஒரு நல்ல தோழனாக என் வாழ்வில் சகலமுமாய் வாழ்ந்த என் உயிர் விடைபெற்றுவிட்டது என்பதை இன்றும் மனம் ஏற்க மறுக்கின்றது. இவர் இல்லாதது ஓவியத்துறைக்கு மட்டும் வெற்றிடமல்ல, இவருடன் பழகிய அன்பர்கள் மனதில் எதிர்பார்ப்பற்ற அன்பிற்கான வெற்றிடமும் என்பதே உண்மை.
‘இனியும் ஒரு பிறப்புண்டெனில் இப்பிறப்பின் தொடர்ச்சியாகவே பிறக்க விரும்புகின்றேன்’ எனக் கூறிச் சென்ற ஓவியர் ஆசை இராசையா அவர்கள் தமது ஓவியங்களூடாகக் காலனை வென்று நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
ஸ்ரீ.காயத்ரி இராசையா M.A., M.Phil
அபிவிருத்தி உத்தியோகத்தர்,
பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.