கண்டி பிரதான வாகன விற்பனையாளர் ஒருவரின் மகனைக் கைது செய்ய விசாரணை மேற்கொள்ளும் பொலிசார்

நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களிடம் வாகனங்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்து தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் கண்டி பிரதான வாகன விற்பனையாளர் ஒருவரின் மகனைக் கைது செய்ய கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹய்யாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளரான சந்தேக நபரின் தந்தையிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மகன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை
தனது மகன் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் மஹய்யாவ வாகன விற்பனை நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி தரகு பணம் தருவதாக கூறி நாட்டில் பலரிடம் வாகனங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட பல வர்த்தகர்கள், தமது வாகனத்தை விற்பனை செய்து பெற்றுக்கொண்ட பணத்தை சந்தேக நபர் வழங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர்.

கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் உவிந்தசிறியின் பணிப்புரையின் பேரில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: webeditor