மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு ஆளுனரிடம் கேட்டறிந்து கொண்ட நெதர்லாந்துத் தூதுவர்..!
நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர்க்கும் (Wiebe de Boer) இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது,
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் கடந்த காலத்தில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைக்கு, தற்போது வருகை தரும் சுற்றுலாவிகளை விடவும் அதிகளவானவர்களை ஈர்க்க வேண்டும் எனத் தூதுவர் விருப்பம் வெளியிட்டார்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர், “உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணக் கோட்டையை மையப்படுத்திய சுற்றுலா மேம்பாட்டுக்கான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் (கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம், பருத்தித்துறை ஆகிய இடங்களில்) அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவமனைகளில், கிளிநொச்சி மருத்துவமனைக்குத் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகத் தூதுவர் குறிப்பிட்டார்.
அம்மருத்துவமனைகளை முழு அளவில் இயங்கச் செய்வதற்குத் தடையாக உள்ள சவால்கள் குறித்தும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், “தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. எமது மாகாணத்திலிருந்து விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்ற. இவற்றை இங்கேயே பெறுமதிசேர் பொருட்களாக (Value Added Products) மாற்றுவதற்கான தொழிற்சாலைகளே எமக்கு அவசியமாகின்றன” என வலியுறுத்தினார்.
மேலும், பனைசார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாகப் பனையிலிருந்து புத்தாக்க முயற்சியாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் வைன் (Wine) உற்பத்தி குறித்தும் ஆளுநர் எடுத்துரைத்தார். இம்முயற்சிகள் எதிர்காலத்தில் மாகாணப் பொருளாதாரத்தில் நேரான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டார்.
அண்மையில் வீசிய ‘டித்வா’ (Ditwa) புயலால் வடக்கில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், மாகாண நிர்வாகச் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தல், போதைப்பொருள் பாவனை விவகாரம் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் உறுதியளித்துள்ளமை வடக்கின் அபிவிருத்திக்குச் சாதகமான சமிக்ஞை எனவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் நெதர்லாந்துத் தூதரகத்தின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகர், கலாசார ஆலோசகர் ஆகியோர் பங்கேற்றனர்.

