இலங்கை சமூகபாதுகாப்பு சபையின் செயற்றிட்ட மதிப்பீட்டு கலந்துரையாடல்..!
இலங்கை சமூகபாதுகாப்பு சபையின் செயற்றிட்ட மதிப்பீட்டு கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.01.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் யாழ்ப்பாண மாவட்ட தொடர்ச்சியாக தேசிய ரீதியாக பெற்று வரும் சாதனைகளை குறிப்பிட்டு உத்தியோகத்தர்களை பாராட்டியதுடன், சமூக பாதுகாப்பு சபையின் திட்ட நடைமுறைப்படுத்தலில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிற்கும் வழங்கப்பட்ட இலக்குகளை எந்தளவில் பிரதேச செயலகங்கள் அடைந்திருந்தமை தொடர்பாக தனித்தனியான கவனம் செலுத்தினார். மேலும், அடைவு மட்டத்தில் திருப்தியற்ற நிலையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இவ் வருடத்திற்கான இலக்குகளை திருப்தியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
சிறப்பான அடிப்படையில் அடைவு மட்டங்களை அடைந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க அதிபரினால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் 13 வது தடவையாக யாழ்ப்பாணம் மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலிடம் (பணச்சேகரிப்பு அடிப்படையில்) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வட மாகாண சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு.பா.பிரதீபன், பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் பங்குபற்றினார்கள்.

