துபாயில் கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக என்ற நபர் கடந்த 3 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளாகும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு
குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் செயற்பட்டு வரும் இலங்கை இன்டர்போலினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தில் கைது செய்யப்பட்டதாக அறிவித்தல் வழங்கப்பட்டது.
அதற்கமைய மேற்கூறப்பட்ட நபரை நாட்டுக்கு அழைத்து வருமாறு கோரி , கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சிடம் கடிதமொன்றை கையளித்தது.
அதன் பின்னர் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கமைய குறித்த நபர் தொடர்பில் எழுதப்பட்ட கடிதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் என்பன செப்டெம்பர் 13 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் சட்டப்பிரிவினால் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை
அதன் பின்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி சட்ட அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை கோரியிருந்தது. அதற்கமைய செப்டெம்பர் 26 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
அதற்கமைய செப்டெம்பர் 30 ஆம் திகதி குறித்த சந்தேகநபரை விடுதலை செய்ய வேண்டாம் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை எமிர் இராச்சியத்தின் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு, அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டது.
எனவே பாதுகாப்பு அமைச்சு ஆவணங்களை கையளிப்பதை தாமதப்படுத்தியதாகக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில் பாதுகாப்பு அமைச்சு பின்வாங்கப் போவதில்லை.
எனவே இவ்வாறு வெளியிடப்படும் போலி செய்திகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் கைது செய்யப்பட்ட இலங்கையரின் பின்னணி
துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரும்,சர்வதேச பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் போது கடந்த 11ஆம் திகதி துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் நாட்டை விட்டு துபாய்க்கு தப்பிச் சென்ற போது பயன்படுத்திய போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட ஹரக் கட்டாவின் முகத்துடன் இறந்த நபரின் தகவலைப் பயன்படுத்தி போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,நாடு முழுவதும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கொலைகள் ஹரக் கட்டாவின் வலிக்காட்டலில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், ‘ஹரக் கட்டா’ துபாயில் இருந்து இலங்கைக்கு பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பல்வேறு முறைகளில் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.