தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணிகளே தீர்வு..!
தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி திஸ்ஸ விகாரை தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கிறோம்.
ஆனால் குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் அரசாங்கம் என்ற வகையில் குறித்த பிரச்சினையை நீடிக்காமல் முடிறுத்தவே எதிர்பார்க்கின்ற நிலையில் விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு உரிய மாற்றுக்காணிகளை வழங்குவது அல்லது தற்போதைய சூழ்நிலைக் கேற்ற அவர்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு கூட எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க குறித்த பிரச்சனையை அரசியல் ரீதியாக மாற்றிக்கொண்டு செல்கிறார்கள்.
நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது.
ஆகவே அரசாங்கம் திடமான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணியே என அமைச்சர் அவர் மேலும் தெரிவித்தார்.

