கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP உறுப்பினருக்கு பிணை..!
கிராம உத்தியோகத்தர் ஒருவரை திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர், 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதவான் தயானி சந்தியா ரத்நாயக்க, சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் நிபந்தனை விதித்தார்.
அத்துடன் வழக்கை 2026.08.05 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர் புத்தளம் பிரதேச சபையின் மங்களஎலிய வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விமல் ரோஹன என்பவராவார்.
கடந்த 5 ஆம் திகதி தான் அனர்த்த நிவாரணக் கடமைகளுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, குறித்த உறுப்பினர் வந்த சிறிய லொறி ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் உறுப்பினர் தன்னைத் திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தான் இது குறித்து முந்தல் பிரதேச செயலாளருக்கு அறிவித்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற அனர்த்தக் குழுக் கூட்டத்தின் பின்னரும் குறித்த உறுப்பினர் தனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டியதாகவும் கிராம உத்தியோகத்தர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட அழைப்பின் பேரில், உறுப்பினர் இன்று காலை முந்தல் பொலிஸில் ஆஜரானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

