கொக்குதொடுவாயில் சிங்களவருக்கு இடமில்லை..

முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது.

அதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள் பருவகால மீன்பிடியில் ஈடுபடுவதற்காகவே ஆரம்பத்தில் கொக்கிளாயை நோக்கி வருகைதந்தனர். அங்கு தங்கியிருந்து பருவகால மீன்பிடியில் ஈடுபட்டு பின்னர் பருவகாலம் முடிவுற்றதும் தமது சொந்த இடங்களுக்கே திரும்பிச் செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்திலிருந்த தமிழ்மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிற்பாடு, எமது தமிழ் மக்களின் பூர்வீக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின மீனவர்கள் குடியேறினர்.

எமது தமிழ்மக்களுக்குரிய 20ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீக தனியார் காணிகள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடமுள்ளது.

அவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள் காணப்படுகின்றன.

எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப்பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை ஏற்றுக்கொள்ளமுடியாது.

கடந்தகாலத்தில் தமிழர்களின் பூர்வீக மணலாற்று பகுதிக் காணிகளை முன்னைய அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமிப்புச்செய்து சிங்களர்களிற்கு பகிர்ந்தளித்திருந்தனர்.

Recommended For You

About the Author: admin