இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை..!
“திட்வா” புயலினால் ஏற்பட்ட அழிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கையின் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு உலகின் முன்னணி பொருளாதார ஆய்வாளர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.
நோபல் பரிசு வென்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உட்பட உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் 120 பேர் கொண்ட குழுவினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“திட்வா” புயலினால் ஏற்பட்ட சூழலியல் அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு, நாட்டின் கடன் திருப்பிச் செலுத்துதலை நிர்வகிக்கக்கூடிய நிலைக்கு மீட்டெடுப்பதற்காக, புதிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறும் அக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையில் இந்திய அபிவிருத்திப் பொருளாதார நிபுணரான ஜெயதி கோஷ், தோமஸ் பிக்கெட், ஆர்ஜென்டினாவின் முன்னாள் நிதியமைச்சர் மார்ட்டின் குஸ்மான் மற்றும் ‘டோனட் எகனாமிக்ஸ்’ (Doughnut Economics) நூலின் ஆசிரியர் கேட் ராவார்த் உள்ளிட்ட 120 பொருளாதார நிபுணர்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள அவசர தேவைகள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மேலதிக கடனை ஏற்கனவே பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் கடன் பெற வேண்டியேற்படும் எனவும் அந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு இறைமைக் கடன் செலுத்துதல்களை உடனடியாக இடைநிறுத்துமாறும், புதிய சூழ்நிலைகளின் கீழ் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு புதிய மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

