உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..!

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..!

கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் உடுதும்பரை பகுதியில் 308 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும், உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் பொப்பிட்டிய பகுதியில் 234 மி.மீ, நுகதென்ன பகுதியில் 221 மி.மீ மற்றும் கைகாவல பகுதியில் 218 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

உடுதும்பரை பகுதியில் மண்சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுவதால் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும், அப்பகுதி மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கோரிக்கை விடுத்துள்ளது.

நிலவும் மழை நிலைமையால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான ‘வெளியேற்றல்’ (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பரை, மெததும்பரை மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் பெய்த கடும் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் அல்லது கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

அப்பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அல்லது மண்மேடு சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவ்விடங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin