கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(17.12.2025) புதன்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில், காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, உட்கட்டமைப்பு சேதங்களுக்குச் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்கள், நிவாரண உதவிகள், உலர் உணவு விநியோகம், வீடு சுத்தப்படுத்தல் கொடுப்பனவு, சேதமடைத்த வீடுகளிற்கான கொடுப்பனவு, அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியாரின் உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மேலும் நெற்பயிர், மேட்டுநில பயிர்ச்செய்கை மரக்கறி மற்றும் பழவகைகளின் பயிர் அழிவு, கால்நடை, மீன்பிடி, தொழில் முயற்சி முதலான வாழ்வாதார சேத விபரங்கள் மற்றும் நீர்ப்பாசனம், விவசாயம், வீதி, மின்சாரம், குடிநீர், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உட்கட்டுமான் சேத விபரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட வெள்ள அபாய பிரதேசங்கள் தொடர்பில் விளக்கமளித்த மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் அங்கு அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
அத்துடன் வெள்ள அனர்த்த காலத்தில் உதவியவர்களின் பணி விபரங்கள் காட்சிப்படுத்தி அவர்களது பணிகளை பாராட்டியதுடன், இடர் காலத்தில் உதவிய அனைவருக்கும் மாவட்டம் சார்ந்து தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதில் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருந்தி திட்டங்கள், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், மாவட்ட அபிவிருத்தி திட்டம், மீள்குடியேற்றம், பிரமந்தனாறு காலநிலைக்கு அமைவான சமூக விவசாயப் பண்ணை, நலன்புரி நன்மைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மத்திய அரச திணைக்களங்களின் முன்னேற்ற மீளாய்வில் சமுர்த்தி, கமநல அபிவிருத்தி திணைக்களம், தெங்கு பயிர்ச்செய்கை சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் நீரியல் வள திணைக்களம், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
மாகாண அமைச்சுக்கள் மற்றும் மாகாண திணைக்களங்களின் முன்னேற்ற மீளாய்வில் விவசாய அமைச்சு, கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, உள்ளுராட்சி அமைச்சு, சுகாதார சேவைகள் அமைச்சு, மகளீர் விவகார அமைச்சின் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இதில் குறிப்பாக பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதற்கு 2025ம் ஆண்டு பாதீட்டில் 500.00 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 100% திறைசேரிக்கு உரித்தான இக் கம்பனி கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குவதுடன் இக் கம்பனியானது 1956ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டுவரை குறித்த இடத்தில் இயங்கிய குறித்த நிறுவனத்திற்கு 30 ஏக்கர் காணியை குறித்த இடத்தில் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் முன்சாத்திய ஆய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இத் தொழிற்சாலையில் வரவுள்ள தொழில் வாய்ப்புக்கள் குறித்து எமது மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு இப்பொழுதிருந்தே தெளிவூட்டல்களை வழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கேட்டுக் கொண்டார். ஏனெனில் அவர்கள் அதற்குரிய தொழிற்கல்வியை பெற்று தம்மை வடிவமைத்துக்கொள்ள உதவியாக அமையும் என்றார்.
இறுதியாக சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் கிளிநொச்சிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரால் முக்கிய தரவுகள் முன்வைக்கப்பட்டதுடன், இதனைத் தடுப்பதற்கான பொறிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வெள்ள அனர்த்த்தித்தினால் அள்ளிவரப்பட்ட மணல் திட்டுக்களை அந்தந்த பிரதேச சபைகளிடம் வழங்குதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. பிரதேச சபைகள் அவற்றை மக்களுக்கு விற்பனை செய்யும் பணிகளை முன்னெடுக்கும். இதன் ஊடாக பிரதேச சபைகளின் வருமானம் அதிகரிக்கும்.
இக்கூட்டத்தில் யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், மாகாண மற்றும் மத்திய அமைச்சின் திணைக்களங்களின் மாகாண, மாவட்ட தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், உத்தியோகத்தார்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


