லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை, டில்கூல்றி தோட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்ற அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பொறுப்புவாய்ந்தவர்கள் அசமந்தப் போக்கில் செயற்படுவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தின் மூன்றாம் இலக்க லயன் குடியிருப்புக்கு (தொடர் குடியிருப்பு) அருகாமையில் ஆபத்தான ஐந்து பாரிய மரங்கள் காணப்படுகின்றன.
அப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால், மரங்கள் உள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் சில மரங்களின் வேர்கள் பிடிமானமின்றி வெளியே தெரிகின்றன. சிறிய காற்று வீசினால் கூட இந்த மரங்கள் முறிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
இதனால் வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டு உயிராபத்துகள் ஏற்படக்கூடும்.
இது தொடர்பாகத் தோட்ட நிர்வாகம், கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான ஐந்து மரங்களை வெட்டி அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், மரங்களை வெட்டுவது யார் என்பதில் ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் சிறிய மழை பெய்தாலோ அல்லது காற்று வீசினாலோ இந்த மரங்கள் விழக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
இதனால் பலர் இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் விடிய விடிய கண் விழித்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் இவ்வளவு அனர்த்தங்கள் இடம்பெற்றும் அதிகாரிகள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தாது இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்திற் கொண்டு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

