ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார்.
அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய முதலீட்டு கூட்டாண்மை தொடர்பில் ஹனீப் யூசுப் அவர்களுக்கு உள்ள அநுபவம் மற்றும் இலங்கையின் தனியார் துறையின் அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க அவருக்கு உள்ள இயலுமையை பாராட்டும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் மூலோபாய பங்குதாரர்களுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களுக்கான வசதிகளை வழங்குதல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீகளை(FDI) இந்நாட்டிற்கு கொண்டு வரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளித்தல், முக்கிய முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு அவற்றை மேம்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குதல், இலங்கை முதலீட்டுச் சபை (BOI), ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB), துறைமுக நகர ஆணைக்குழு மற்றும் குறித்த துறை சார் அமைச்சுகளுடன் நெருங்கிய தொடர்புகளுடன் செயற்படுதல் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.
நாட்டில் நிலைபேறான வெளிநாட்டு முதலீடுகளுக்கு உகந்த சூழலை கட்டியெழுப்பவும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைத்தன்மை பற்றி சர்வதேச நம்பிக்கையை உறுதி செய்யவும், பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹனீப் யூசுப், மேல் மாகாண ஆளுநர் நியமனத்திற்கு மேலதிகமாக கௌரவ சேவையாக இப்பதவியில் செயற்படுவார்.

