தகனசாலை கட்டணத்தில் 6 வருட மோசடி !
நுவரெலியா கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தகனசாலையில், கடந்த ஆறு வருடங்களாக தகனச் சடங்குகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் பாரிய மோசடி இடம்பெற்று வருவதாகப் பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த மோசடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாகவே தகனத்திற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
தற்போது எரிவாயுவின் விலை வெகுவாகக் குறைந்த பின்னரும், பிரதேச சபை நிர்வாகம் கட்டணத்தைக் குறைக்கத் தவறியதன் மூலம் கொட்டகலை மக்களுக்குப் பெரும் துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், கட்டணத்தைக் குறைக்கச் சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

