யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்: செயலரின் அதிகாரம் மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரின் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆணைக்குழு கோரியுள்ளது.
ஆணைக்குழுவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செயலாளரின் பரிந்துரை என்பது “சட்டப்பூர்வ அதிகாரத்தை மீறிய நிர்வாக நடவடிக்கை” எனக் கருதப்படுவதாகவும், இது முறையற்ற நடைமுறையின் மூலம் ஒரு சரியான செயலைச் செய்த ஒரு வழக்கு என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதுள்ள நடைமுறையை உறுதிப்படுத்தாமல் புதிய இடமாற்றக் கொள்கையை வெளியிட்டமை மற்றும் தனிப்பட்ட விருப்புரிமையின் அடிப்படையில் இடமாற்றங்களை முன்னெடுத்தமை போன்றவை உத்தியோகபூர்வ அதிகாரத்தை மீறிய செயல் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் 12(1) சரத்தை மீறுவதாகவும், இது சட்டத்தின் முன் சமத்துவத்தையும் சட்டத்தின் சமமான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது என்றும் HRCSL மேலும் வலியுறுத்தியுள்ளது. எனவே, வட மாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரின் நியமனத்தை மீண்டும் மதிப்பாய்வு செய்து, கடந்த கால நடைமுறைகளுக்கு அமைய, வெளிப்படைத்தன்மை மற்றும் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் நியமனம் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

