கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக 2,000 வெதுப்பகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மொத்தமுள்ள 7,000 வெதுப்பகங்களில் 2,000 வெதுப்பகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. மாவு இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களும் போதுமான அளவு மாவை வழங்கவில்லை.
மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம்
பொதுவாக ஒரு கோதுமை கப்பலுக்கு 15 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றன. ஆனால், நிறுவனங்களுக்கு டொலர் கிடைப்பதில் சிரமம் உள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் காரணமாக ஒரு சில வெதுப்பகங்கள் மட்டுமே 50 கிலோகிராம் கோதுமையை 13,500 ரூபாய்க்கு பெற முடிகிறது.
பொருளாதார நெருக்கடி
இதன்போது சிறிய அளவிலான மாவை விநியோகிக்கும் தந்திரமான வியாபாரிகள் 50 கிலோகிராமிற்கு 25,000 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
இந்த நிலையில் மூலப்பொருட்களின் அதிக விலை, அதிக மின் கட்டணம் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக, பாண் மற்றும் பேஸ்ட்ரி பொருட்களின் விலையை விரைவில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.