யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பண நிகழ்வு..!

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பண நிகழ்வு..!

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பண நிகழ்வு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (30.09.2025) காலை 09.30 மணிக்கு நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ வசந்த சமரசிங்க அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களும், கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா அவர்களும், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் அவர்களும் கலந்து கொண்டு, யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் உத்தியோகபூர்வமாக மீள அங்குரார்ப்பணம் செய்து யாழ்ப்பாணம் உள்ளூர் விளைபொருட்கள் மொத்த விற்பனை வியாபாரிகளிடம் கையளிக்கப்பட்டதுடன் வியாபார செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இன்றைய நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகைதந்துள்ள வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ வசந்த சமரசிங்க அவர்களையும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களையும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வருகைதந்த அனைவரையும் வரவேற்று, அமைச்சர் கெளரவ வசந்த சமரசிங்க அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்து கலந்துரையாடியதற்கு அமைய இன்று மீள அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு காத்திரமான பங்களிப்பை கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் வழங்கி வந்தமையினை அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், இவ் விசேட பொருளாதார மத்திய நிலையம் சரியான முறையில் இயங்கினால் சந்தை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் எனவும், குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கத்தக்கவகையில் இவ் நிலையம் அமைவதன் மூலம் இலங்கை பூராகவும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும், ஏனையமாவட்டங்களின் பொருட்களை இங்கு பெற்றுக்கொள்ளவும் வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டு, இவ் நிலையம் சிறப்பாக இயங்குவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், அனைவரினதும் பங்களிப்புடன் சவால்களுக்கு மத்தியில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை ஆக்கபூர்வமாக தொடர்ச்சியாக செயற்படுத்த அனைவரிதும் ஒத்துழைப்பு தேவை எனவும், தேசிய உற்பத்திக்கு விவசாயம் முக்கிய பங்குவகிப்பதாகவும், அந்த வகையில் விவசாயத்தினை ஊக்குவிக்க வேண்டும் எனவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது குறைவாகவுள்ளதாகவும், அதனை ஆராய்ந்து ஊக்குவிக்க புத்திஜீவிகள், அதிகாரிகளுக்கு தாம் அழைப்புவிடுவதாகவும் யாழ்ப்பாணத்தின் முதுகெலும்பான விவசாயத்தினை முன்னேற்றவும் வலுப்படுத்தவும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்திலும், போதைப் பொருள் இலஞ்சம் மற்றும் வாள்வெட்டுஆகியவற்றை முற்றாக அழிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், பொருளாதார ரீதியாக எமது நாடு தற்போது முன்னேறிவருவதாகவும், டொலரின் பெறுமதி சீராகவுள்ளதாகவும் குறிப்பிட்டு, இவ் பொருளாதார மத்திய நிலையம் மேன்மேலும் சிறப்பாக இயங்குவதற்கான சகல வசதிகளும் எமது அரசாங்கதினால் மேற்கொள்ளப்படும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ வசந்த சமரசிங்க அவர்கள் தமதுரையில், யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்திய நிலையம் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது எனவும், தமது அரசாங்கம் கட்டியெழுப்ப முனைப்புக்காட்டி வருவதாகவும், வட மாகாண உற்பத்திக்கான சந்தைவாய்ப்பிற்கான வாய்ப்பாக பயன்படுத்தலாம் எனவும், உல்லாசப் பயணிகள் வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், பனை உற்பத்திகள், கருவாட்டு உற்பத்திகள் போன்றவற்றிற்கான மத்திய நிலையமாக பயன்படுத்தவும், விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மத்திய நிலையமாகவும், சுயதொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மத்திய நிலையமாக மாற்றவும், கூட்டுறவு மற்றும் சதோச விற்பனை நிலையங்களை உருவாக்கி இவ் நிலையத்தினை மேம்படுத்தலாம் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார். இவ் விசேட பொருளாதார மத்திய நிலையத்தினை மீள இயக்குவதற்கு கடற்றொழி்ல் அமைச்சர் மற்றும் அரசாங்க அதிபருடன் தாம் கலந்துரையாடியதாகவும், இன்று மீள அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நிலையத்தினை தொடர்ச்சியாக திறம்பட இயக்குவதற்கு வர்த்தகர்கள், வியாபாரிகள் பூரணமான ஒத்துழைப்பினை வழங்குமாறு கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி ஜெயரட்ண, அமைச்சின் உயர் அதிகாரிகள், வடமகாண விவசாய அமைச்சின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

Recommended For You

About the Author: admin