தென்மராட்சி நாவற்குழிப் பிரதேசத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 24நபர்களில் மூன்று நபர்கள் தொடர்பான வழக்கில் தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்றைய தினம்(29.08.2025) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (29.08.2025) வெள்ளிக்கிழமை மேற்படி வழக்கு தீர்ப்பிற்காக எடுக்கப்பட்ட நிலையில் கௌரவ நீதவான் வருகை தராமையால் பதில் நீதவானால் மீண்டும் தீர்ப்பிற்காக தவணையிடப்பட்ட நிலையிலேயே மேற்படி சுற்றிவளைப்பில் தனது கணவரை பறிகொடுத்த மனைவியும்,மகனைப் பறிகொடுத்த வயோதிபப் பெற்றோரும் மேற்படி தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக மேலும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்;
கடந்த 1996ஆம் ஆண்டு சுற்றிவளைப்பில் காணாமல் போனோர் தொடர்பான வழக்கு 2017 தொடக்கம் இடம்பெற்று வந்தது.தற்போது வழக்கு முடிந்து மூன்று தவவைகள் தீர்ப்பிற்காக தவணையிடப்பட்டுள்ளது.நியாயமான
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். தற்போது நல்ல தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாமும் வயது முதிர்ந்த காலத்தில் தீர்விற்காக அலைந்து திரிகிறோம். எம்மோடு தீர்விற்காக அலைந்து திரிந்த வயோதிபப் பெண் ஒருவர் இன்று நோய்வாய்ப்பட்டு நீதிமன்றம் வர முடியாத நிலையில் உள்ளார்.
அதேநேரம் மகனைத் தொலைத்த தந்தை ஒருவரும் தள்ளாடும் நிலையில் இன்று நீதிமன்றம் வந்துள்ளார்.
தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இருக்க மீண்டும் மீண்டும் தவணையிடப்படுவது எமது நம்பிக்கையை உடைத்துள்ளது.
என மேலும் அவர்கள் கண்ணீர் மல்க கருத்துத் தெரிவித்திருந்தனர்.

