பங்களாதேஷ் நாட்டவர்கள் மூன்று பேர் போலி இலங்கை கடவுச்சீட்டுகளுடன் கைது!
இன்று மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குச் செல்லவிருந்த மூன்று பங்களாதேஷ் நாட்டவர்கள், போலி இலங்கை கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள (DIE) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பகல் 3.10 மணிக்கு ஷார்ஜாவுக்குச் செல்லவிருந்த ஏர் அரேபியா விமானமான G9509 இல் ஏறவிருந்த இந்த மூன்று வெளிநாட்டவர்கள் மீது சந்தேகம் கொண்ட குடிவரவு அதிகாரிகள், அவர்களை சோதனையிட்டனர்.
பயணிகளை சோதனை செய்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள எல்லை கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள், அவர்களின் பயணப் பொதிகளில் போலி இலங்கை கடவுச்சீட்டுகளையும், போலி உள்ளூர் குடிவரவு முத்திரைகளையும் கண்டுபிடித்தனர்.
பயணிகள் சுற்றுலா விசாவில் மே மாதம் இலங்கைக்கு வந்திருந்ததாகவும், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல போலி பயண ஆவணங்களைப் பயன்படுத்த முயன்றதாகவும் ஒரு சிரேஷ்ட குடிவரவு அதிகாரி டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
விசாரணையில், சந்தேக நபர்கள், தங்கள் பங்களாதேஷ் கடவுச்சீட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஷார்ஜாவுக்குள் நுழைந்து, பின்னர் போலி இலங்கை கடவுச்சீட்டுகளுடன் டெஹ்ரானுக்குள் நுழைய திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையில், பயணிகள் பெரும் தொகைக்கு உள்ளூர் முகவர் ஒருவரிடமிருந்து போலி பயண ஆவணங்களைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த வெளிநாட்டவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.


